குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்கள், ஆயுதப் படைகளுக்கு 103 வீர தீர விருதுகளையும், மத்திய ஆயுதக் காவல் படைகள் மற்றும் மாநிலக் காவல் படைகளின் பணியாளர்களுக்கு 213 வீர தீர விருதுகளையும் வழங்கியுள்ளார்.
இந்த வீர தீர விருதுகள் தவிர, சிறப்பான மற்றும் போற்றத்தக்க சேவைக்கான பல விருதுகள் உட்பட மொத்தம் 1,037 விருதுகள் வழங்கப்பட்டன.
பாதுகாப்பு அமைச்சகம் பின்வரும் விருதுகளை அறிவித்தது:
நான்கு கீர்த்தி சக்ரா விருதுகள் (மூன்று மறைவிற்குப் பின்),
18 சௌர்ய சக்ரா விருதுகள் (4 மறைவிற்குப் பின்),
சேனா பதக்கத்திற்கு இணையான ஒரு விருது (வீர தீர செயல்),
63 சேனா பதக்கங்கள் (வீர தீர செயல், மறைவிற்குப் பின்னதாக வழங்கப்பட்ட இரண்டு பதக்கங்கள் உட்பட),
11 நவோ சேனா பதக்கங்கள் (வீர தீர செயல்), மற்றும்
ஆறு வாயு சேனா பதக்கங்கள் (வீர தீர செயல்).
சேனா பதக்கங்கள் ஆனது இந்திய தரைப் படை ராணுவத்திற்கும், நவோ சேனா மற்றும் வாயு சேனா பதக்கங்கள் முறையே கடற்படை மற்றும் விமானப் படை ஆகியவற்றுக்கு வழங்கப் படுகின்றன.
இராணுவ நடவடிக்கைகளில் பெரும் பங்களித்ததற்காக கென்ட் எனப்படும் இராணுவ நாய்க்கு மரணத்திற்குப் பிந்தையதான சிறப்பு விருது உட்பட இராணுவத்திற்கான விருதிற்குப் பரிந்துரைக்கப்படும் 39 வீரர்களின் பட்டியலுக்கும் குடியரசுத் தலைவர் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.
கூடுதலாக, இந்தியக் கடலோரக் காவல்படை வீரர்களுக்கு ஒரு குடியரசுத் தலைவரின் தத்ரக்சக் பதக்கம் (சிறப்பான சேவை), ஒரு தத்ரக்சக் பதக்கம் (வீர தீர செயல்), மற்றும் இரண்டு தத்ரக்சக் பதக்கங்கள் (போற்றத்தக்க சேவை) ஆகியவற்றையும் அவர் அங்கீகரித்தார்.
இந்த விருதுகள் மகத்தான துணிச்சலையும் சேவையையும் அங்கீகரிக்கின்றன.
மத்திய சேமக் காவல் படைக்கு (CRPF) மொத்தம் 52 வீர தீர பதக்கங்கள் மற்றும் ஐந்து சௌரியா பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் இது அனைத்து மத்திய ஆயுதக் காவல் படைகள் (CAPFs) மற்றும் மாநில காவல்துறைப் படைகள் பெற்ற பதக்கங்களில் அதிகமாகும்.