தமிழக நிதி மற்றும் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் P.T.R. பழனிவேல் தியாகராஜன் சென்னையிலுள்ள தலைமைச் செயலகத்தில் மாநிலத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையினை வெளியிட்டார்.
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற நிதி முறைகேடுகள் குறித்து இந்த வெள்ளை அறிக்கை மேற்கோளிட்டுக் காட்டியுள்ளது.
தமிழகத்தில் 2006-11 ஆகிய ஆண்டுகளில் 10.15% ஆக இருந்த மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியின் சராசரி வருடாந்திர வளர்ச்சி வீதமானது 2016-20 ஆகிய ஆண்டுகளில் 7.22% ஆகக் குறைந்துள்ளது என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 8 ஆண்டுகளாக தமிழகத்தில் வருவாய்ப் பற்றாக்குறை மோசமாகி வருகிறது.
2020-21 ஆம் நிதியாண்டிற்கான வருவாய்ப் பற்றாக் குறையானது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3.16% ஆகும்.
அரசுக் கடன்கள் அதிகரித்து வருவதால் மாநிலத்தின் நிதிப்பற்றாக் குறையானது பிரதானமாக அதிகரித்து வருகிறது.
நிதிப் பற்றாக்குறையானது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 4.43% ஆக உள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு குடும்பத்தின் பேரிலும் 2,63,976 ரூபாய் பொதுக் கடன் உள்ளது.
பொதுக் கடனானது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 26.69% ஆகும்.
மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் கணிசமான அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது.
2020-21 ஆம் ஆண்டில் மானியங்களானது வருவாய்ச் செலவினத்தில் 27.06% ஆகவும், மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 3.21% ஆகவும் உயர்ந்துள்ளது.
மின்சாரத்திற்கான மானியமானது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் அதிக பட்சமாக 1.10% ஆக உள்ளது.
உணவு மானியமானது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 0.49% ஆக உள்ளது.
போக்குவரத்து மீதான மானியமானது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 0.19% ஆக உள்ளது.