இந்திய கடலோரப் பாதுகாப்புப் படையில் ‘ஷவுர்யா’ என்ற கடல் ரோந்துக் கப்பல் (OPV) சேர்க்கப்பட்டுள்ளது. 105 மீட்டர் நீளம் உள்ள கடல் ரோந்துக் கப்பல்கள் வரிசையில் ‘ஷவுர்யா’ ஆறாவது கப்பல் ஆகும். கோவாவில் நடந்த விழாவின் போது இந்தக் கப்பல் கடலோரப் பாதுகாப்புப் படையில் முறைப்படி இணைக்கப்பட்டது.
9100 கிலோ வாட் சக்தி கொண்ட டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் இக்கப்பலானது 2350 டன் அளவிலான எடையினை இழுக்கவல்லது. முழுவதும் உள்நாட்டிலேயே தயாராகும் இக்கப்பல், கோவா கப்பல்கட்டுந்துறையில் கட்டப்படுகிறது. அதிநவீன உணரிகள், இயந்திரங்கள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்களும் இதில் அமையவுள்ளன.
ஹெலிகாப்டர், அதிவேக இயந்திரப் படகுகள் போன்றவற்றை சுமந்து செல்லும் வகையில் இக்கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கடலில் எண்ணெய் கசிவது போன்ற சுற்றுப்புறச் சூழல் மாசு நிகழும்பொழுது அதற்கேற்ப தகுந்த நடவடிக்கைகள் எடுக்கும் உபகரணங்களும் இந்தக் கப்பலில் பொருத்தப்படும்.
‘ஷவுர்யா’ கப்பல் சென்னையில் பணியமர்த்தப்படும். கடலோரக் காவல்படை தளபதியின் (கிழக்கு) தலைமையில் இயங்கவிருக்கும் இக்கப்பலானது இந்தியாவின் பிரத்யேகப் பொருளாதாரப் பண்டலங்களைக் கண்காணிப்பதில் பெருமளவு பயன்படுத்தப்படும். இது இந்தியாவில் கடற்படை பலத்தை கூட்டும் விதமாக அமையும்.