சம்பலில் உள்ள 16 ஆம் நூற்றாண்டினைச் சேர்ந்த ஜமா மஸ்ஜித் ஒரு பழமையான ஹரி ஹரன் கோயிலின் இடத்தில் கட்டப்பட்டது என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி மற்றும் ஈத்கா மஸ்ஜித் மதுரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள கமால்-மௌலா மஸ்ஜித் ஆகிய வழக்குகளில் கூறப்பட்ட கோரல்களை ஒத்ததாக இது இருந்தது.
சம்பல் மசூதி ஒரு பாதுகாக்கப்பட்ட தேசிய நினைவுச்சின்னமாகும்.
1526 மற்றும் 1530 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் முகலாயப் பேரரசர் பாபர் அவர்களால் கட்டமைக்கப்பட்ட மூன்று மசூதிகளில் சம்பலில் உள்ள ஜமா மஸ்ஜித் மசூதியும் ஒன்றாகும்.
மற்ற இரண்டு மசூதிகள் ஆனது பானிபட் நகரில் உள்ள மசூதி மற்றும் 1992 ஆம் ஆண்டில் இடிக்கப்பட்ட அயோத்தியில் உள்ள பாபர் மசூதி ஆகியனவாகும்.
சம்பல் மசூதியானது 1528 ஆம் ஆண்டில் பாபரின் தளபதி மிர் இந்து பெக் என்பவரால் கட்டப்பட்டது.
விஷ்ணுவின் பத்தாவது அவதாரமான கல்கி, சம்பலில் அவதரிப்பார் என்று இந்து புராணங்களில் நம்பப் படுகிறது.
1991 ஆம் ஆண்டு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் படி, 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று இருந்த அனைத்து வழிபாட்டுத் தலங்களின் மதத் தன்மையும் பேணப் பட வேண்டும்.
சம்பல் மசூதி தொடர்பாக தற்போது தாக்கல் செய்யப்பட்ட மனுவில் 1991 ஆம் ஆண்டு சட்டத்திற்கு முரணாக, வழிபாட்டுத் தலத்தின் ஒரு அடிப்படைத் தன்மையை மாற்றக் கோரப் பட்டுள்ளது.