இரத்தக்குழாய்களில் பொருத்தப்படும் ஸ்டென்ட் உபகரணத்துக்கு அதிகப்படியான விலை நிர்ணயிக்கக் கூடாது என்று மருத்துவமனைகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மருத்துவத்துறையில் உயிர்காக்கும் முக்கிய உபகரணங்களில் ஒன்றாக 'ஸ்டென்ட் கருதப்படுகிறது. அடைப்புகளால் தடைபட்ட இரத்த ஓட்டத்தை மீண்டும் சீராக்குவதற்காக இவை இரத்தக் குழாய்களில் பொருத்தப்படுகின்றன. இந்த உபகரணங்களுக்கான விலை மீது எந்தக் கட்டுப்பாடும் இல்லாத போது, அவற்றைப் பொருத்துவதற்காக பல லட்சக்கணக்கான ரூபாயை தனியார் மருத்துவமனை நிர்வாகங்கள் நோயாளிகளிடம் வசூலித்தன.
இந்நிலையில் மத்திய மருந்தகத்துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் ஓர் அறிவிப்பு வெளியானது. 'ஸ்டென்ட் உபகரணங்களுக்கான விலை 85 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, சாதாரண ஸ்டென்ட் விலை ரூ.7,260 எனவும், மருந்து நிரப்பப்பட்ட 'ஸ்டென்ட் உபகரணம் ரூ.29,600 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. அதன்படி, 'ஸ்டென்ட் உபகரணத்துக்கு அதிகவிலை நிர்ணயிக்கக்கூடாது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.